Tuesday, November 24, 2020

ஸ்ரீ காஞ்சி காமாக்ஷி அம்மன்

மாயை அகற்றி ஞானம் அருளும் காஞ்சி காமாட்சி! 

தேவியின்  51 சக்தி பீடங்களில், காஞ்சி காமாட்சி அம்மனின் காமகோடி பீடமும் ஒன்று.

 கிருதயுகத்தில் துர்வாசரரால் 2,000 ஸ்லோகங்களாலும், திரேதாயுகத்தில் பரசுராமரால் 1,500 ஸ்லோகங்களாலும், துவாபரயுகத்தில் தௌமியாசார்யரால் 1,000 ஸ்லோகங்களாலும், கலியுகத்தில் ஆதிசங்கரரால் 500 ஸ்லோகங்களாலும் போற்றி வழிபடப் பெற்றவள் காஞ்சி காமாட்சி அம்மன்.

காஞ்சியில் காமாட்சி ஒன்பது வயது சிறுமியாகத் தோன்றி, பண்டாசுரன் என்னும் அசுரனை வதம் செய்தாள். 

காஞ்சி காமாட்சி அம்மனுக்கு ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரி, மூக கவியின் மூக பஞ்சசதீ, துர்வாசரின் ஆர்யா த்விசதி ஆகிய ஸ்தோத்திரங்கள் மிகவும் ப்ரீதியானவை.

கருவறையில் அம்பிகை பத்மாசன கோலத்தில் கரும்பு வில்லும், புஷ்ப பாணமும் கொண்டு எழிலார்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள். அம்பிகை பத்மாசன கோலத்தில் வீற்றிருப்பது மிகவும் விசேஷமாகும்.

 பண்டாசுரனை வதம் செய்த உக்கிரத்துடன் திகழ்ந்த அம்மனின் திருவுருவத்தின் முன்பாக ஆதிசங்கரர் ஶ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்து சாந்தப்படுத்தினார்.
அம்பிகையின் முன்பாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஶ்ரீசக்ரத்தில், `ஶ்ரீ ‘ என்பது லட்சுமியின் அம்சம் ஆகும். எனவே, காமாட்சி அம்மனை வழிபட்டால், அனைத்து ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.
காமாட்சி அம்மன் ஆலயத்தில் அரூபமாக லட்சுமி அருள்வதுடன், அன்னபூரணியும் சரஸ்வதியும் சந்நிதிகொண்டிருக்கின்றனர். 
மகா பெரியவா தம்முடைய அருளுரையில், 'மாயைக்குக் காரணமான பிரம்ம சக்தி காமாட்சி தேவி. அவளே ஞானமும் அருள்பவள். அனைத்துக்கும் அவளுடைய கருணைதான் காரணம் என்று அருளி உள்ளார்.

1 comment: