ஸ்ரீ காஞ்சிபுரம் காமாக்ஷி அம்மனின் சிறப்புரை
நற்கதி நல்கும் திருத்தலமாகவும், மேன்மை அளிக்கும் பெரும்பதியாகவும், சிவ—விஷ்ணு—சக்தி—முருக வழிபாடுகளுக்கான சிறப்பிடமாகவும் புராணங்களும் முனிவர்களும் போற்றுகிற ஊர், ஒரு சிலவேயாகும். அவற்றுள்ளெல்லாம் அற்புதப் பதியாக விளங்குவது கச்சிப்பதி என்னும் காஞ்சிபுரம். தென்னிந்தியாவின் தலைச்சுட்டியாக மிளிர்கிற இத்திருத்தலத்தை அறியாதார் யார்? முக்தித் தலங்கள் ஏழனுள் ஒன்றாகப் பாராட்டப்பெறுகிற இவ்வூர், புனிதத்துள் புனிதமாய வாரணாசிக்கு (மட்டுமே) அடுத்ததாக வைக்கப்பெறுகிறது.
காஞ்சிபுரம் காமாக்ஷியம்மன் திருக்கோவிலில், அம்பிகையின் அருள் திருமேனிக்கு முன்பாக, ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரத்தைப் பிரதிஷ்டை செய்தார். ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ பரமாச்சார்யாளின் நெஞ்சுக்கு மிகவும் நெருக்கமான காமாக்ஷியம்மன் திருக்கோவில், மிகச் சமீபத்தில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் காணவிருக்கிறது.
ஸ்ரீ ஆதிசங்கராசார்ய மூலாம்னாய பீடமான ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68ஆவது பீடாதிபதியாகத் திகழ்ந்த ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், பரமாச்சார்யாள் என்றும் மஹாஸ்வாமிகள் என்றும் மஹா பெரியவா என்றும் போற்றப்பெற்றார். பரமார்சார்யாளின் அருளையும் ஆசியையும் நாடி, அரசர்களும் இளவரசர்களும், ஆட்சித் தலைவர்களும் ஆஸ்தான பண்டிதர்களும், நாட்டு அதிபர்களும் பிரதம மந்திரிகளும், ஆசான்களும் அன்னக்காவடிகளும் எவ்வித பேதமுமின்றிக் குவிந்தனர். காமாக்ஷியம்மன் திருக்கோவிலின்மீது மிகுந்த அன்பு பூண்ட பரமாச்சார்யாள், கோவிலின் பூஜைமுறைகளைச் செம்மைப்படுத்தியதோடு, கருவறை விமானத்திற்குத் தங்கத் தகடுகள் வேய்ந்து அழகு பார்த்தார்.
ராஜராஜேச்வரி என்றும் பராசக்தி என்றும் வழிபடப்பெறுகிற காமாக்ஷி அம்பிகை, தன்னை வணங்குபவர்களுக்கு அனைத்து வரங்களையும் அருள்கிறாள்; ஆகவே, போகதாயினி ஆகவும் மோக்ஷதாயினி ஆகவும் திகழ்கிறாள். தன் பக்தர்களுக்கு ஞானம் அளிக்கிறாள்; ஆகவே, ஞான ஸ்வரூபி ஆகிறாள். அவளே, என்றென்றும் லோகமாதா. அவள் அடிபணிந்து வணங்கும் ஒவ்வொருவரும் அவளுடைய சாந்நித்தியத்தை உணரமுடியும்.
ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தின் தியான ஸ்லோகம், அம்பாளை, ஸ்ரீ வித்யாம், சாந்த மூர்த்தீம், ஸகல ஸுரநுதாம், ஸர்வ ஸம்பத் ப்ரதாத்ரீம் என்று போற்றுகிறது. சாந்த மூர்த்தீம் என்பதால், அம்பாளின் சாந்த ஸ்வரூபம் சிறப்பாகச் சுட்டப்பெறுகிறது. ஸ்ரீ காமாக்ஷி அம்பாள், சாந்த ஸ்வரூபிணி. லலிதா த்ரிபுரசுந்தரியான ஜகன்மாதா, இங்கு (காஞ்சிபுரத்தில்) அருள்மிகு காமாக்ஷியாகக் கொலுவிருக்கிறாள். தவத் திருக்கோலம் பூண்டு, நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள். திருக்கரங்களில் பாசம், அங்குசம், கரும்பு வில் (இக்ஷு கோதண்டம்), மலர் அம்புகள் (பஞ்ச பாணங்கள்) கொண்டு இலங்குகிறாள். கருணாமூர்த்தியாகக் கனிவுகொடுக்கும் அம்பாள், தனது திருக்கண்களாலேயே பக்தர்களுக்கு அருள் கடாக்ஷிக்கிறாள். 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீ காமாக்ஷியம்மனுக்குப் பூஜை செய்யும், 75 வயது முதியவரான பரம்பரை அர்ச்சகர் நீலக்கல் என் ராமசந்திர சாஸ்திரிகள், ‘அம்பாளின் திருநாமமான காமாக்ஷி என்பதே, சரஸ்வதியும் லக்ஷ்மியும் அவளின் திருக்கண்களாக விளங்குகிறார்கள் என்பதைக் காட்டுகிறது’ என்கிறார்.
காஞ்சி நகரத்தின் மையத்தில் ஒளிர்கிறது அருள்மிகு காமாக்ஷியம்மன் திருக்கோவில். அருள்மிகு ஏகாம்ரேச்வரர் திருக்கோவில் வடமேற்கிலும் அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவில் தென்கிழக்கிலும் துலங்குகின்றன. நகரத்தின் பிற பிரதான கோவில்கள் யாவும், காமாக்ஷியம்மன் திருக்கோவிலை நோக்குமாறு அமைந்துள்ளன. கருவறையில், காமாக்ஷியம்மன், பரப்ரஹ்ம ஸ்வரூபிணியாக, பஞ்ச ப்ரஹ்மங்களான பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேச்வரன், சதாசிவன் ஆகியோர்மீது பத்மாஸனமிட்டு அமர்ந்திருக்கிறாள்.
ஆதிசங்கரரால் அம்பிகையின் திருமுன்னர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீசக்ரத்திற்கு அர்ச்சனைகளும் பூஜைகளும் செய்யப்படுகின்றன. காஞ்சிபுரத்தின் வேறெந்த சிவன் கோவிலிலும் அம்பாள் சந்நிதி கிடையாது. உயர்வுமிக்க பராசக்தியாக, காமாக்ஷியின் பேரருளே காஞ்சிபுரம் முழுவதும் ஆட்சி செய்கிறது. அம்பாள் கருவறையைச் சுற்றி, அர்த்தநாரீச்வரர், சௌந்தர்யலக்ஷ்மி, கள்வர் (திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்றவர்), வாராஹி ஆகியோருக்கும் கோஷ்ட சந்நிதிகள் உள்ளன.
ஸ்ரீ காமாக்ஷியம்மன் திருமேனி பிரதிஷ்டை செய்யப்பெற்றுள்ள கருவறைப் பகுதிக்கு ‘காயத்ரி மண்டபம்’ என்று பெயர். இம்மண்டபத்தில், 24 தூண்கள் உள்ளன; இவை, காயத்ரி மந்திரத்தின் 24 அக்ஷரங்களைக் குறிக்கின்றன. காயத்ரி மண்டபத்திற்கு வலப்பக்கமாக, வாராஹி, அரூபலக்ஷ்மி, சந்தான கணபதி ஆகியோரின் சந்நிதிகள் காணப்படுகின்றன. வெள்ளிக் கவசமிடப்பட்டுள்ள சந்தான ஸ்தம்பம், பிள்ளை வரம் கேட்டுப் பிரார்த்தித்த தசரதச் சக்கரவர்த்தியால் ஸ்தாபிதம் செய்யப்பட்டது என்பர். இராமருக்கும் அவருடைய வம்சாவளியினருக்கும் காமாக்ஷியே குடும்ப தெய்வம்.
இந்தத் திருக்கோவிலின் வழக்கப்படி, காமாக்ஷியம்மன் பிரசாதமான குங்குமம், முதலில் பிரார்த்தனைகளோடு அரூபலக்ஷ்மிக்குச் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் அவளுடைய பாதங்களிலிருந்து பக்தர்களால் எடுக்கப்பட்டு நெற்றியில் அணிந்துகொள்ளப்படுகிறது.
காமாக்ஷி விலாஸம் என்னும் நூல் காஞ்சிபுர நகரம், அதன் எல்லைகள், விஸ்தீரணம், காமாக்ஷியம்மன் திருக்கோவில், பிற கோவில்களுக்கு இக்கோவிலுடன் இருக்கும் தொடர்பு ஆகிய அனைத்து விவரங்களையும் தருகிறது. அம்மன் கோவிலைச் சுற்றியுள்ள சிவ, விஷ்ணு, முருக, கணபதி ஆலயங்களின் புனிதத்துவம் குறித்தும் அவை காமாக்ஷியம்மன் கோவிலிலிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளன என்பது குறித்தும் மிக விவரமாக வர்ணிக்கும் காமாக்ஷி விலாஸம், அம்பாள் காமாக்ஷியின் காருண்யத்தையும் மேன்மையையும் மிகத் தெளிவாகத் தெரிவிக்கிறது. காஞ்சிபுரத்திற்கு அப்பாலுள்ள சிவன் கோவில்களின் அம்பாள் சந்நிதிகள்கூட, காமகோஷ்டம் என்றே வழங்கப்பெறுகின்றன. துர்வாசரால் இயற்றப்பெற்றதாக அறியப்படும் சௌபாக்ய சிந்தாமணி என்னும் கிரந்தத்தின்படியே, காமாக்ஷியம்மன் திருக்கோவில் பூஜைகள் நடைபெறுகின்றன. சக்தியின் பஞ்சபூதத் தலங்களை விளக்குகிற சௌபாக்ய சிந்தாமணி, காஞ்சிபுரமே அம்பிகையின் ஆகாசத் தலம் என்றும் உரைக்கிறது (சிவபெருமானுக்கான ஆகாசத் தலம் சிதம்பரம் என்பதுபோல).
ஸ்ரீ லலிதா அஷ்டோத்தர சதநாமாவளி, காமாக்ஷியம்மனைக் காமகோடி மஹாபீடஸ்தாயை நமோ நம: என்று போற்றுகிறது. ஸ்ரீ லலிதா த்ரிசதி, அவளைக் காமேச்வரி என்றும், காமகோடி நிலயா என்றும் அழைக்கிறது. த்ரிகூடா, சிவ காமேச்வராங்கஸ்தா, சிவஸ்வாதீன வல்லபா, காமகோடிகா போன்ற திருநாமங்களால், ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில் அவள் துதிக்கப்படுகிறாள்.
ஸ்ரீ வித்யையின் முக்கியத்துவம்
ஸ்ரீ வித்யை ஞானத்தை அடைவதே, மிக உயர்வான ஞானமாகக் கருதப்படுகிறது. முறையாகப் பயிலப்பெற்று, நெறியோடு நடைமுறைப்படுத்தப்பெற்றால்,ஸ்ரீவித்யையின் வாயிலாக, ஸாதகன் தன்னைப் பிரபஞ்சத்தோடு அடையாளப்படுத்திக் கொள்ளமுடியும். பற்பல பிறவிகளில் தெய்வ வழிபாடுசெய்து பக்குவப்பட்டிருந்தாலொழிய, இப்படிப்பட்ட மேலான முக்திப் பாதை சாத்தியமில்லை. ஆன்ம பலத்தை உயர்த்திக் கொள்ளமட்டுமேஸ்ரீவித்யையைப் பயன்படுத்தி, அம்பாளை முறையோடும் நெறியோடும் வழிபடுபவர்கள் வெகு சிலரே ஆவர். 1968ல், ஆந்திரத்தில் முகாமிட்டிருந்த மஹாபெரியவா,அமைதிக்காகவும் சாந்தத்திற்காகவும் ஸ்ரீவித்யை பயிலப்படவேண்டுமென்றும், பரமானந்தத்தின்பொருட்டுத்தகுதியானவர்களுக்கு வழங்கப்படவேண்டும் என்றும் உபதேசித்தார்கள்.
காஞ்சிபுரத்திற்கு ஏராளமான பண்டைய பெயர்கள் உள்ளன. துண்டீர மண்டலம், தபோவனம், பிரஹ்மசாலை, அற்புத க்ஷேத்திரம், ஸத்யவ்ரத க்ஷேத்திரம், பாஸ்கர க்ஷேத்திரம், தர்ம க்ஷேத்திரம் ஆகியவை இப்பெயர்களில் சில. காஞ்சியின் தெய்வங்களின் மஹத்துவத்தைப் பஞ்சசத் உரைக்க, ஊர் மற்றும் தீர்த்தங்களின் பெருமையை சதக்யானம் கூறுகிறது. ஸ்ரீ காமாக்ஷியம்மனின் பிரபாவத்தைக் காமாக்ஷி விலாஸம் விவரிக்கிறது. மஹாலக்ஷ்மி, ஹயக்ரீவர், மனுச் சக்கரவர்த்தி, தசரதச் சக்கரவர்த்தி, துண்டீர மஹாராஜா ஆகியோர் காமாக்ஷியம்மனை வழிபட்டுள்ளனர். 6ஆம் நூற்றாண்டில், இத்திருக்கோவில் பெரியதாக விரிவுபடுத்தப்பட்டதாகத் தொல்லியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment