ஶ்ரீசித்பராசக்தி மஹிமை:
ஶ்ரீவித்யோபாஸனை ஒரு பார்வை 8:
ஶ்ரீவித்யோபாஸனையானது ஸகல ஸாஸ்த்ரங்களிலும் விளங்கும் தன்மையை சிந்தித்தோம்!! ஸாதாரணமாக தற்காலத்தில் ஶ்ரீவித்யை என்றால் பாலையோ அல்லது பஞ்சதசியோ ஷோடஷியோ உபதேசம் பெற்றுக்கொண்டு உபாஸிப்பது என்று வழக்கமாக உள்ளது.
வாஸ்தவமாக ஶ்ரீவித்யை என்பது ஒரு மணி நேர ஜபத்திலோ அல்லது மூன்று மணி நேர ஆவரண பூஜையிலோ மட்டும் முடிந்துவிடக்கூடிய விஷயம் இல்லை. ஶ்ரீவித்யை என்பதே ஒரு வாழ்க்கை முறை. SrividyA is a way of life.
தனது வாழ்நாளை முழுவதும் ஶ்ரீவித்யோபாஸனைக்கு அர்ப்பணம் செய்யும் மஹாத்மாக்களால் மட்டுமே ஶ்ரீவித்யையின் தாத்பர்யத்தை ஓரளவாவது புரிந்துகொள்ள இயலும்.
ஶ்ரீவித்யோபாஸகனின் நித்ய கர்மா மிகவும் கடினம். மிகச்சமீபமாக அத்தனை உபாஸனா க்ரமங்களையும் வழுவாமல் செய்து வாழ்ந்த மஹாத்மா தாடேபள்ளி ஶ்ரீராகவநாராயண ஸாஸ்த்ரிகளே. அவர் ஸாக்ஷாத் அம்பாளாகவே வாழ்ந்தவர். தனது கரம் பட்ட க்ஷணத்திலேயே குண்டலினியை எழுப்பக்கூடிய சக்தி பொருந்தியவர். கடும் ஆசாரசீலர். பரம வைதீகர். பவானியை ப்ரத்யக்ஷமாய்க் கண்டவர்.
காலை எழுந்ததும் படுக்கையிலேயே பராசக்தியின் "திவ்யமங்களா த்யானம்" எனும் மஹாத்யானத்தைச் செய்து, பின் ரச்மி மாலா மந்த்ரங்களை ஜபித்து, பின்னரே படுக்கையை விட்டு எழவேணும். பின்னர் பல்துலக்க வேப்பங்குச்சியோ அல்லது ஆலங்குச்சியோ கொண்டு அதை மந்த்ரத்தால் அபிமந்த்ரித்து பின் பல்துலக்கி, ஸ்நாநம் செய்து, வேஷ்டி(புடைவை) ஜலத்தை பிழிய வேண்டிய மந்த்ரத்தை ஜபித்து, பின் பிழிந்து உலர்த்த வேணும்.
பின் மடி கட்டிக்கொண்டு வைதீக ஸந்த்யா பூர்த்தி செய்து, தாந்த்ரீக ஸந்த்யாவந்தனத்தில் காலை வாக்பவேச்வரியை, மதியம் காமராஜேச்வரியை, ஸாயங்காலம் அம்ருதேச்வரியை, இராக்காலம் ஸமஷ்டி மூர்த்தியை த்யானித்து, நான்கு ஸந்த்யைகளையும் பூர்த்தி செய்ய வேணும்.
காலை ஸந்த்யா பூர்த்தியான பிறகு, தனக்குபதேசமான மஹாமந்த்ரங்களை ஜபித்து, பரதேவதைக்கு அர்ப்பணம் செய்ய வேணும். பின்னர் ஷட் பாராயணங்களில் அந்தந்த தின/திதிக்கு ஏற்றாப்போல பாராயணங்களைச் செய்ய வேணும்.
பிறகு ஶ்ரீலலிதா ஸஹஸ்ரநாமா, ஶ்ரீஆம்னாய ஸ்தோத்ரம், ஶ்ரீத்ரிபுராம்பா ஸ்தவராஜம், ஶ்ரீதேவீ கட்கமாலை(ஸுத்த சக்தி மாலை), ஶ்ரீலலிதா த்ரிசதி முதலியவைகளை மிக அவச்யமாக பாராயணம் செய்ய வேணும். இவை ஒரு உபாஸகனுக்கு இன்றியமையாதவை. நித்யமும் அவச்யமாக பாராயணம் செய்ய வேண்டியவை. சாப்பிடுவது, தூங்குவது போல இது நித்ய கடமை.
பின்னர் நேரமிருந்தால் ஶ்ரீஸர்வபூர்த்திகரி, ஶ்ரீகாமாக்ஷி பஞ்சசதி முதலியவைகளைச் செய்யலாம்.
நித்ய நவாவரண பூஜை விஸ்தாரம் இல்லாதே போனாலும் லகு நவாவரணம் உத்தம பக்ஷம். மத்யம பக்ஷத்தில் பஞ்சபர்வாக்களான அமாவாஸ்யை, பௌர்ணமி, க்ருஷ்ண பக்ஷத்து அஷ்டமி, நவமி, சதுர்தசி திதிகளிலாவது மிக அவச்யமாக செய்ய வேணும், அதம பக்ஷம் பௌர்ணமாஸ்யையிலாவது மிக அவச்யமாக செய்ய வேணும்.
ஒரு ஶ்ரீவித்யோபாஸகனில் நித்யபடி கர்மா இங்கே சுருக்கி சொல்லப்பட்டது. முக்யமாக ஸதா ஸர்வதா ஶ்ரீவித்யாம்பாளான ஶ்ரீமஹாகாமேச்வரி ஸஹித ஶ்ரீகாமேச்வர த்யானத்திலும், அஜபா ஜபத்திலும் மூழ்கி இருக்க வேணும். அஹமித்யேவ விபாவயே பவானீம் எனும் பாவனையை அவலம்பிக்க முயற்சிக்க வேணும்.
தொடர்ந்து சிந்திப்போம்.
ஸர்வம் லலிதார்ப்பணம்
காமாக்ஷி சரணம்
-- மயிலாடுதுறை ராகவன்
No comments:
Post a Comment