ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
சமீபத்தில் காஞ்சி மடத்தின் (existence) ஸ்தாபனம் குறித்து பதிவு பார்க்க நேரிட்டது.
1 வாராண ஸீம் யோகி வரோதிகம்ய
புஜைரிவ ஸ்ரீ ஹரிரேஷ சிஷ்யை: |
சஹாத்மநா பஞ்ச மடானமீஷாம்
ப்ரகல்ப்ய தஸ்தௌ கதிசித்–திநானி ||
(மூன்றாம் சர்கம், 23-ம் ச்லோகம்)
ஸ்ரீசங்கர மடங்கள் : தெய்வத்தின் குரல் ஐந்தாம் பகுதி
காமகோடி
தாம் வேதாந்தத்தால் நிலைநிறுத்திய ஆத்மிய – ஸமூஹ ஒற்றுமையும் அந்த வேதாந்த மதமும் என்றென்றும் லோகத்தில் நிலையாக இருக்கவேண்டுமென்று ஆசார்யாள் நினைத்தார். அதற்காக அநேக மடங்களை ஸ்தாபித்துத் தம்முடைய சிஷ்யர்களை அவற்றில் ஆசார்யர்களாக வைத்தார். இவை அத்வைத வேதாந்தத்தைச் சொல்ல மட்டும் ஏற்பட்டவையல்ல. அதற்கு அதிகாரிகளாகக் கொஞ்சம் பேரே இருப்பார்கள். ஜன ஸமூஹம் முழுவதையும் அந்த goal பக்கம் திருப்பி விடுவதற்குக் கர்மாநுஷ்டானத்தையும், பக்தியையும், வேத சாஸ்த்ர நம்பிக்கையையும் வளர்த்துக் கொடுக்கவேண்டும்; சாஸ்த்ர விஷயமாக ஜனங்களுக்கு ஏற்படும் ஸந்தேஹங்களை நிவர்த்தி செய்ய வேண்டும்; சர்ச்சைகளுக்குத் தீர்ப்புப் பண்ணவேண்டும். இவை எல்லாவற்றையும் செய்வதற்கே தர்ம பீடங்களாக ஆசார்யாள் மட ஸ்தாபனம் பண்ணியது.
ச்ருங்கேரி, த்வாரகை, புரி, பதரி, காஞ்சி என்ற ஐந்தும் ப்ரதான மடங்கள். இன்னம் பலவும் அவர் ஸ்தாபித்ததாகத் தெரிகிறது. இப்படி அநேகம் அவர் ஸ்தாபித்துத் தான் இருக்கவேண்டும். இத்தனாம் பெரிய உபகண்டத்தில் மத வளர்ச்சி குன்றாமல் ரக்ஷித்துக் கொடுப்பதற்குக், ரயிலா, தபாலா இல்லாத காலத்தில் ஆயிரம் மைலுக்கு ஒரு மடம் என்று ஐந்து ஸ்தாபித்திருந்தால் போதுமானதாயிருந்திருக்குமா? ஆர்யாவர்த்தம் என்று heart-land-ஆக விந்த்ய மலைக்கு வடக்கே உள்ள விஸ்தாரமான ப்ரதேசத்தில் ஹிமயக் கோடியில் (பதரி நாதத்தில்) , இப்பவும்கூட ச்ரமப்பட்டே அடையக் கூடியதாக உள்ள இடத்தில் ஒரு மடம், கிழக்கு-மேற்கு ஸமுத்ரக் கரையோரங்களில் ஒவ்வொரு மடம் மட்டும் ஸ்தாபித்தால் போதுமென்று அவர் நினைத்திருக்க முடியுமா? அதனால் இன்னும் பல ஸ்தாபித்தே இருக்கவேண்டும். பிற்காலத்தில் துருஷ்கர்கள் பண்ணிய ஹகாஹதத்தில் எத்தனை ஆலயங்கள் தூள் தூளாயின? காசி விச்வநாதர் மந்திரமே எத்தனை தடவை இடிபட்டு இடிபட்டுக் கட்ட வேண்டியிருந்திருக்கிறது? ராமனும், க்ருஷ்ணனும் பிறந்து வளர்ந்த அயோத்தியில், மதுராவில் ஒரு ப்ராசீனமான ஆலயமாவது இன்றைக்கு இருக்கிறதா? ஹிந்து மதம் என்று காட்டிக்கொள்ளவே பயப்படும்படியாக, வேத சப்தம் எழுப்பவே பயப்படும்படியாக எத்தனை கொடுமை, அக்ரமம் நடந்திருக்கிறது? முக்யமாக ஹிந்து தர்ம பீடங்களைத்தானே எதிரிகள் தாக்கியிருப்பார்கள்? இந்தப் பேயாட்டத்தில் அநேக மடங்களை மங்கிப் போயிருக்க வேண்டும். சில எடுபட்டே போயிருக்க வேண்டும்.
தேசம் முழுதிலும் ஐந்து ப்ரதான மடங்கள் என்பது போலக் காசியிலேயே ஐந்து மடங்களும், திருச்சூரில் ஐந்து மடங்களும் ஆசார்யாள் ஸ்தாபித்ததாகத் தெரிகிறது. காசி இந்த தேசத்திற்கே பண்டித ராஜதானியாகவும், ஆசார்யாளே பல காலம் வஸித்து உபதேசம் பண்ணிய க்ஷேத்ரமாகவும் இருந்திருப்பது. திருச்சூர்தான் ஆசார்யாள் அவதரிப்பதற்கே ஈச்வரன் வரம் கொடுத்த மஹா க்ஷேத்ரம். ச்ருங்கேரி ஸ்வாமிகள் ஒருவரின் ஆஜ்ஞைப்படியும், மேல் பார்வையிலும் எழுதப்பட்ட “குரு வம்ச காவ்ய” புஸ்தகத்தில் – “மஹாவிஷ்ணுக்கு நாலு புஜங்கள் மாதிரித் தமக்கு இருந்த நாலு சிஷ்யர்களுக்கென்றும், தமக்கே ஒன்று என்றும், மொத்தம் ஐந்து மடங்கள் வாராணஸியில் (காசியில்) ஆசார்யாள் ஏற்படுத்திவிட்டுச் சில காலம் தங்கியிருந்தார்” என்று இருக்கிறது1.
போன நூற்றாண்டில்கூட “இந்த்ர” என்ற பட்டம் பெற்ற ஆசார்ய பரம்பரையைச் சேர்ந்த ஸ்வாமிகள் காசியில் இருந்திருக்கிறார்கள் என்று அங்கே சிவாலய காட்டில் (கட்டத்தில்) உள்ள ப்ரஹ்மேந்த்ர மடம் என்பதில் உள்ள சாஸனத்திலிருந்து தெரிகிறது. சந்த்ரசேகர ஸ்வாமிகள் என்பவரின் சிஷ்யரான விச்வநாத ஸ்வாமிகளை அது குறிப்பிடுகிறது2.
ஸுமேரு மடம் என்றும் பாதுகா மடம் என்றும் சொல்கிற ஒன்று, காசியிலிருக்கிறது. அதன் ஜீர்ணோத்தாரண கைங்கர்யத்திற்காக ஒரு ‘அப்பீல்’ விடப்பட்டது. அநேக ஸ்வாமிஜிகள், மஹா மஹாபாத்யாயாக்கள், ப்ரமுகர்களின் பேரில் வெளியான அந்த அப்பீலில் அந்த மடம் ஆசார்யாளே தம்முடைய காசி வாஸத்தின்போது ஸ்தாபித்தது என்று சொல்லியிருக்கிறது.
ஹிமாலயத்திலேயே ஜ்யோதிர்மடம் தவிர, கங்கோத்ரியில் ஆசார்யாள் ஒரு மடம் ஸ்தாபித்ததாக போன நூற்றாண்டில் வெளியான “Light of the East” – வால்யூம் ஒன்றில் இருக்கிறது.3 விளம்பரமே போடாமலும், ரொம்ப குறைச்சல் விலை வைத்தும் கோரக்பூர் கீதா ப்ரெஸ்ஸில் பத்ரிகைகளும் புஸ்தகங்களும் போட்டு வருகிறார்களல்லாவா? அவர்களுடைய “கல்யாண்” பத்திரிகையின் ‘தீர்த்தாங்க’ மலரின் பூமிகை (முகவுரை) யிலும் ஸுமேரு மடத்தையும், கங்கோத்ரி மடத்தையும் சொல்லியிருக்கிறது.
“கொச்சின் ஸ்டேட் மானுவல்” என்ற புஸ்தகம் திருச்சூரிலுள்ள ஐந்து சங்கர மடங்களைப் பற்றிச் சொல்கிறது. ‘தெக்கே (தெற்கு) மடம், ”வடக்கே மடம்’ என்று ஒவ்வொரு திசையின் பெயரிலும் ஒன்று, மத்தியில் ‘நடுவிலே மடம்’, – என்பதாக ஐந்து மடங்கள் அங்கே இருந்திருக்கின்றன. தற்போது தெக்கே மடம், நடுவிலே மடம் இரண்டுதான் இருக்கின்றன. தெக்கே மடத்தில் இதுவரை எண்பது பேர் பட்டத்திலிருந்திருப்பதாகச் சொல்கிறார்கள். வடக்கே மடம் தற்போது ‘ப்ரஹ்மஸ்வ மடம்’ ஆகியிருக்கிறது – அதாவது வேத பாடசாலை.
புரிஜகந்நாதத்திலேயே ப்ராதனமாகவுள்ள கோவர்த்தன மடத்தைத் தவிர சங்கரானந்த மடம், சிவதீர்த்த மடம், கோபால தீர்த்த மடம் என்றும் மூன்று அத்வைத மடங்கள் இருக்கின்றன.
வித்யாரண்ய ஸ்வாமிகள் புது மடங்கள் ஸ்தாபித்தும் பழசுக்குப் புது சோபை கொடுத்தும் கன்னட தேசத்திலும் அதை ஒட்டிய தெலுங்குச் சீமைகளிலும் ஒன்பது மடங்களில் விசேஷ மரியாதை பெற்று ‘நவமடீ நாதர்’ என்று பெயர் பெற்றியிருப்பதாக விஷயம் தெரிந்தவர்களுக்குத் தெரியும். ஆனால் ஒன்பது மட்டுமில்லை, பதினைந்து சங்கர மடங்கள் கன்னட, ஆந்த்ர, மலையாள, மஹாராஷ்டர தேசங்களில், புனாவரையிலுங்கூட, இருப்பதாக “கல்யாண்” பத்ரிகையின் “தீர்த்தாங்க” மலரில் பேர் கொடுத்திருக்கிறது4. இவை தவிரவும் பூமிகையில் ராமேச்வரம், ஸ்ரீசைலம் உள்பட இருபது இடங்களிலுள்ள மடங்கள் “ஸ்ரீ சங்கராசார்யாதி வித்யா-தர்ம-பீடாதிப-பரம்பராகத மட”ங்கள் என்று சொல்லியிருப்பதில்தான் ஸுமேரு மடம், கங்கோத்ரி மடம் ஆகியவை பற்றியும் இருக்கிறது.
ஆசார்யாளின் நேர் சிஷ்யர்களின் பெயரிலும் இவற்றில் சிலதைச் சொல்கிறார்கள். திருச்சூர் மடங்களைப் பற்றியும் இப்படிப் பத்மபாத, ஸுரேச்வராசார்யார்கள் ஸ்தாபித்ததாக ஐதிஹ்யம் இருக்கிறது. (பதரியிலுள்ள) ஜ்யோதிர் மடத்தின் ‘சாகா (கிளை) மட’மாகத் தோடகாசார்யாள் சகடபுரம் மடத்தை ஸ்தாபித்ததாகச் சொல்லப்படுகிறது.
எது, யார் ஸ்தாபித்தது என்று விசாரித்துக்கொண்டே போனால் முடிவேயிருக்காது. ஆத்ம லாபமாக, ஞானமாகவோ பக்தியாகவோ, இல்லாமல் அது பாட்டுக்கு ஆராய்ச்சி போய்க்கொண்டிருக்கும்! ஆசார்யாள் ஸ்தாபித்திருக்கவே முடியாது என்று சொல்வதற்குக் காரணமில்லாததாலும், இந்தப் பெரிய தேசத்தில் மதத்தைக் கட்டிக் காப்பதற்கு எத்தனை மடம் வேண்டுமானாலும் ஸ்தாபிக்க அவச்யம் இருந்தததாலும் அவர் அநேக மடங்களை ஸ்தாபித்ததாகவே ஒப்புக்கொண்டு எல்லாவற்றையும் குருபீடங்களென்று நமஸ்காரம் பண்ணலாம்.
No comments:
Post a Comment