Wednesday, December 2, 2020

இரண்டு பெரிய வம்சங்களில் வந்த தம்பதி."ஆர்யாம்பா---காஞ்சி காமாக்ஷி, ஆர்யன்---ஐயப்பன்

ஆர்யாம்பா---காஞ்சி காமாக்ஷி, ஆர்யன்---ஐயப்பன்
====================================

'ஆர்யா', 'ஆர்யன்', 'ஐயன்', 'ஐயர், 'ஐயனார்', 'ஐயப்பன்'
======================================

"அப்பா பெயர் கும்பகோண ஸம்பந்தமுள்ளதென்றால் அம்மா பெயர் காஞ்சி ஸம்பந்தமுள்ளதென்று ஒரு விதத்தில் சொல்லலாம். 'சிவகுரு' மாதிரி 'ஆர்யாம்பா'வும் அபூர்வமான பேர்தான்.

மலையாளத்தில் ஆரியங்காவு சபரிமலை வழியிலிருக்கிறது. ஆர்யனுடைய காடு என்று அர்த்தம். ஆர்யன் என்பது சபரிமலை சாஸ்தாவைத்தான். 'ஆர்யன்' தான் தமிழில் 'ஐயன்' ஆயிற்று. அதை மரியாதையாகப் பன்மையில் சொன்னால் 'ஐயர்' அல்லது 'ஐயனார்'. ஐயனார், ஐயனாரப்பன் என்பதே தமிழ்நாட்டில் சாஸ்தாவின் பெயர். மலையாளத்தில் 'ஐயப்பன்' என்பதும் அதே வார்த்தைதான். த்ராவிடர்களின் க்ராம தேவதை என்று இக்கால ஆராய்ச்சிக்காரர்களால் சொல்லப்படுபவர்தான் 'ஆர்ய'ராகவும். 'ஐய'ராகவும் இருக்கிறார்! இந்த இன பேத ஆராய்ச்சியெல்லாம் எவ்வளவு தப்பான அடிப்படையில் உண்டானது என்பதற்கு இது மாதிரிப் பல சான்றுகள் இருக்கின்றன. அது இருக்கட்டும்.

ஆர்யா என்பது அம்பாளின் -- பரமேச்வர பத்னியாக இருக்கப்பட்ட பராசக்தியின் -- பெயர். " உமா காத்யாயநீ கௌரீ "என்று ஆரம்பித்து அமரத்தில் அம்பாள் நாமங்களைச் சொல்லிக்கொண்டு போகும்போது " ஆர்யா தாக்ஷாயணீ சைவ கிரிஜா " என்று வருகிறது. குறிப்பாக த்ரிபுரஸுந்தரி என்கிற ரூபத்தில் தநுர்-பாண-பாச-அங்குசங்களுடன் செக்கச் செவேலென்று உள்ள அம்பாளையே 'ஆர்யா' என்று சொல்வதாகத் தெரிகிறது. அந்த ரூப லக்ஷணங்களோடேயே இருப்பவள்தான் காஞ்சி காமாக்ஷி. "காமாக்ஷிமஹா த்ரிபுரஸுந்தரி" என்றே அவளைச் சொல்வது. லலிதாம்பிகை என்பதும் இந்த ரூபத்தைத்தான்.

காஞ்சி காமகோஷ்ட பூஜா பத்ததியை அநுக்ரஹித்தவர் துர்வாஸர். அவர் அவளைப் பற்றி இருநூறு ச்லோகமுள்ள ஒரு ஸ்துதி செய்திருக்கிறார். அதற்கு 'ஆர்யா த்விசதி' என்றே பேர்1. (த்வி - சதி என்றால் இரு -- நூறு.) காமாக்ஷியைக் குறித்த மிகவும் உத்தமமான இன்னொரு ஸ்துதி உண்டு. அது 'பஞ்சசதி', அதாவது 500 ஸ்லோகம் கொண்டது, மூகர் என்பவர் செய்தது. அதனால் 'மூக பஞ்சசதி' எனப்படுவது. அதிலும் முதல் நூறு ஸ்லோகங்களுக்கு ' ஆர்யா சதகம் ' என்றே தலைப்புக் கொடுத்திருக்கிறது.

பரமேஸ்வரனோடு சேரவேண்டும் என்பதற்காகக் காஞ்சீபுரத்தில் காமாக்ஷி தபஸிருந்தது பிரஸித்தம். காமாக்ஷி அப்படி தபஸிருந்த ஊர் காஞ்சீபுரம் என்று கந்தபுராணத்தில் குறிப்பிடுகிறபோது 'ஆரியை தவஞ்செய்பதி' என்றே சொல்லிருக்கிறது.

(ஸ்ரீசரணர்கள் குறிப்பிடும் சொற்றொடர் கந்தபுராணம், தக்ஷ காண்டம், 21-ம் படலத்தில் 'வாரிதிகள்' எனத் தொடங்கும் 15-ம் பாடலில் வருகிறது.)

ஆகையால் காஞ்சி காமாக்ஷிக்கு விசேஷமாக உள்ள பெயரே ஆசார்யாளின் தாயாருக்கு வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அம்பாளே அம்மாவாக வந்து ஆர்யாம்பா என்று பெயர் வைத்துக்கொண்ட மாதிரி த்வனிக்கிறது!

சிவனுக்கு குரு (அப்பா) சிவகுரு என்பதுபோல ஆர்யரான ஆசார்யாளுக்கு அம்பா (அம்மா) ஆர்யாம்பா என்றும் பொருத்தம் பார்த்தோம்.

இரண்டு பெரிய வம்சங்களில் வந்த தம்பதி."

No comments:

Post a Comment