Monday, July 3, 2023
Thursday, January 5, 2023
காமக்ஷி விருத்தம்
#காமாட்சி_அம்மன்_விருத்தம்
காமாட்சி விருத்தம் படிச்சேன்.
இந்த வரிகள் என்னமோ செய்யுது
இந்த வரிகளை எத்தனை தடவை படித்தேன் என்று தெரியவில்லை.
படிக்க படிக்க உடல் புல்லரித்து கண்ணீர் தான் வருகிறது.
இன்று காலை பொழுதில் அன்பர்களுக்காக படித்தால்/ கேட்டால்/பாராயணம் செய்தால் 16 பேறுகளுடன் அன்னை காமாட்சியின் அருளை பூரணமாக பெற்று தரும் அபூர்வமான "காமாட்சி விருத்தம்" என்ற அபூர்வ பதிகத்தை முழுமையாக தருகிறேன். இந்த விருத்தம் ஆழ்ந்த பக்தியின் வெளிப்பாடு. உரிமை, கோவம், பயம், பக்தி, சரணாகதி என்று அனைத்தும் ஒருங்கே இணைந்த பாடல்.
தினமும் பாராயணம் செய்யுங்கள். எல்லா வரங்களையும் அன்னை அருள்வாள்.
கணபதி காப்பு
மங்களம் சேர் கச்சிநகர் மன்னு காமாட்சி மிசை
துங்கமுள நற்பதிகம் சொல்லவே திங்கட்
புயமருவும் பனி அணியும் பரமன் உள்ளந்தனில் மகிழும்
கயமுகன் ஐங்கரன் இருதாள் காப்பு.
சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரி ஜோதியாய் நின்ற உமையே!
சுக்ர வாரத்தில் உனைக் கண்டு தரிசித்தவர்கள் துன்பத்தை நீக்கிடுவாய்!
சிந்தைதனில் உன்பாதம் தன்னையே தொழுபவர்கள் துயரத்தை மாற்றிவிடுவாய்!
ஜெகமெலாம் உன் மாயை! புகழவென்னாலாமோ சிறியனால் முடிந்திடாது
சொந்தவுன் மைந்தனாய் எந்தனை ரட்சிக்க சிறிய கடன் உன்னதம்மா
சிவசிவா மஹேஸ்வரி பரமனிட ஈஸ்வரி சிரோன்மணி மனோன்மணியும் நீ!
அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி அனாத ரட்சகியும் நீ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!
பத்து விரல் மோதிரம் எத்தனை ப்ரகாசமது பாடகம் தண்டை கொலுசும்
பச்சை வைடூரியம் இச்சையாய் இழைத்திட்ட பாதச் சிலம்பின் ஒளியும்
முத்து மூக்குத்தியும் ரத்னப் பதக்கமும் மோகன மாலை அழகும்
முழுதும் வைடூரியம் புஷ்பராகத்தினால் முடிந்திட்ட தாலி அழகும்
சுத்தமாய் இருக்கின்ற காதினில் கம்மலும் செங்கையில் பொன் கங்கணமும்
ஜெகமெலாம் விலை பெற்ற முகமெலாம் ஒளிவுற்ற சிறுகாதுக் கொப்பின் அழகும்
அத்தி வரதன் தங்கை சத்தி சிவரூபத்தை அடியனால் சொல்லத் திறமோ
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!
கெதியாக வந்துன்னைக் கொண்டாடி நினது முன்குறைகளைச் சொல்லி நின்றும்
கொடுமையாய் என் மீதில் வறுமையை வைத்து நீ குழப்பமாய் இருப்பதேனோ
சதிகாரி என்று நான் அறியாமல் உந்தனைச்சதமாக நம்பினேனே
சற்றாகிலும் மனது வைத்து என்னை ரட்சிக்க சாதகம் உனக்கில்லையோ
மதி போல ஒளியுற்ற புகழ் நெடுங்கரமுடைய மதகஜனை ஈன்ற தாயே!
மாயனுடை தங்கையே பரமனது மங்கையே மயானத்தில் நின்ற உமையே!
அதிகாரி என்று நான் ஆசையாய் நம்பினேன் அன்பு வைத்து என்னை ஆள்வாய்!
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே.
பூமியிற் பிள்ளையாய்ப் பிறந்து வளர்ந்துநான்பேரான ஸ்தலமும் அறியேன்!
பெரியோர்கள் தரிசனம் ஒருநாளும் கண்டு நான் போற்றிக் கொண்டாடி அறியேன்!
வாமியென்றே சிவகாமியென்றே உன்னைச் சொல்லி வாயினாற் பாடி அறியேன்!
மாதா பிதாவினது பாதாரவிந்தத்தை வணங்கி ஒருநாளும் அறியேன்!
சாமியென்றே எண்ணிச் சதுரருடன் கைகூப்பிச் சரணங்கள் செய்தும் அறியேன்!
சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டு நான் சாஷ்டாங்க தெண்டனிட்டு அறியேன்!
ஆமிந்தப் பூமியில் அடியனைப் போல் மூடன்ஆச்சி நீ கண்டதுண்டோ?
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே
பெத்த தாய் என்றுன்னை மெத்தவும் நம்பி நான் பிரியனாய் இருந்தனம்மா
பித்தலாட்டக்காரி என்று அறியாது உன்புருஷனை மறந்தேனம்மா
பத்தனாய் இருந்தும் உன் சித்தம் இரங்காமல் பாராமுகம் பார்த்திருந்தால்
பாலன் நான் எப்படி விசனமில்லாமலே பாங்குடன் இருப்பதம்மா!
இத்தனை மோசங்கள் ஆகாது ஆகாது இது தருமம் அல்லவம்மா
எத்தனை ரட்சிக்க சிந்தனைகள் இல்லையோ இது நீதியல்லவம்மா!
அத்திமுகன் ஆசையால் இப்புத்திரனை மறந்தையோ அதை எனக்கு அருள்புரிவாய்!
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!
மாயவன் தங்கை நீ மரகதவல்லி நீ மணிமந்த்ரக்காரி நீயே!
மாயாசொரூபி நீ மகேஸ்வரியுமான நீ மலையரசன் மகளான நீ
தாயே மீனாட்சி நீ சற்குணவல்லி நீ தயாநிதி விசாலட்சியும் நீ
தாரணியில் பெயர் பெற்ற பெரியநாயகியும் நீ, சரவணனை ஈன்றவளும் நீ
பேய்களுடன் ஆடி நீ அத்தனிட பாகமதில் பேறு பெற வளர்ந்தவளும் நீ
ப்ரணவ சொரூபி நீ ப்ரஸன்னவல்லி நீ பிரிய உண்ணாமுலையும் நீ
ஆயி மகமாயி நீ ஆனந்தவல்லி நீ அகிலாண்டவல்லி நீயே
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!
பொல்லாத பிள்ளையாய் இருந்தாலும் பெற்ற தாய் புத்திகளைச் சொல்லவில்லையோ
பேய்ப் பிள்ளையானாலும் தான் பெற்ற பிள்ளையைப் பிரியமாய் வளர்க்கவில்லையோ
கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாய்விட்டுக் கதறி நான் அழுத குரலில்
கடுகுதனில் எட்டிலொரு கூறு அதாகிலும் உன் காதினில் நுழைந்ததில்லையோ
இல்லாத வன்மங்கள் என்மீதில் ஏனம்மா இனி விடுவதில்லை சும்மா
இருவரும் மடிபிடித்துத் தெருதனில் வீழ்வதும் இது தருமம் இல்லையம்மா
எல்லோரும் உன்னையே சொல்லியே ஏசுவார் இது நீதி அல்லவம்மா
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!
முன்னையோர் ஜன்மாந்திரம் என்னென்ன பாவங்கள் மூடன் நான் செய்தனம்மா
மெய்யென்று பொய் சொல்லி கைதனில் பொருள் தட்டி மோசங்கள் பண்ணினேனோ
என்னவோ தெரியாது இட்சணம் தன்னிலே இக்கட்டு வந்ததம்மா
ஏழை நான் செய்தபிழை தாய் பொறுத்து ரட்சித்து என் கவலை தீருமம்மா
சின்னங்கள் ஆகாது ஜெயமில்லையோ தாயே சிறுநாணம் ஆகுதம்மா
சிந்தனைகள் என் மீது வைத்து நல்பாக்கியம் அருள் சிவசக்தி காமாட்சி நீ
அன்ன வாகனமேறி ஆனந்தமாக உன் அடியேன் முன் வந்து நிற்பாய்
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சியே உமையே!
எந்தனைப் போலவே ஜனனம் எடுத்தோர்கள் இன்பமாய் வாழ்ந்திருக்க
யான் செய்த பாவமோ இத்தனை வறுமையில் உன்னடி யேன் தவிப்பதம்மா
உன்னையே துணையென்று உறுதியாய் நம்பினேன் உன் பாதம் சாட்சியாக
உன்னையன்றி வேறு துணை இனி யாரையும் காணேன் உலகந்தனில் எந்தனுக்கு
பின்னையென்று நீ சொல்லாமலே வறுமை போக்கடித்து என்னை ரட்சி
பூலோகம் மெச்சவே பாலன் மார்க்கண்டன் போல் பிரியமாய்க் காத்திடம்மா!
அன்னையே இன்னமுன் அடியேனை ரட்சிக்க அட்டி செய்யாதேயம்மா
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!
பாரதனில் உள்ளளவும் பாக்கியத்தோடென்னைப் பாங்குடன் ரட்சிக்கவும்
பக்தியாய் உன் பாதம் நித்தம் தரிசித்த பாலருக்கு அருள் புரியவும்
சீர் பெற்ற தேகத்தில் சிறுபிணிகள் வாராமல் செங்கலியன் அணுகாமலும்
சேயனிடம் பாக்கியங்களைத் தந்து ஜெயம் பெற்று வாழ்ந்து வரவும்
பேர் பெற்ற காலனைப் பின் தொடர வொட்டாமல் பிரியமாய்க் காத்திடம்மா
பிரியமாய் உன்மீதில் சிறியேன் நான் சொன்ன கவிபிழைகளைப் பொறுத்து ரட்சி
ஆறதனில் மணல் குவித்து அரிய பூசை செய்த என் அன்னையே ஏகாம்பரி
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சி உமையே!
எத்தனை ஜனனம் எடுத்தேனோ தெரியாது இப்பூமி தன்னிலம்மா
இனியாகிலும் கிருபை வைத்து என்னை ரட்சியும் இனி ஜனனம் எடுத்திடாமல்
முத்திர தர வேணும் என்றுன்னையே தொழுது நான்முக்காலும் நம்பினேனே
முன்னும்பின்னும் தோணாத மனிதரைப் போல நீ விழித்திருக்காதேயம்மா
வெற்றி பெற உன் மீதில் பக்தியாய் நான் சொன்ன விருத்தங்கள் பதினொன்றையும்
விருப்பமாய்க் கேட்டு நீ அளித்திடும் செல்வத்தை விமலனார் ஏசப்போறார்
அத்தனிட பாகமதை விட்டுவந்தே என் அரும் குறையைத் தீருமம்மா
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சியே உமையே